சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் தேதி தள்ளிவைக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயில் தாக்கத்தால் எழுந்த கோரிக்கை
தமிழகத்தில் 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள், வழக்கம்போல் ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று முன்னதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பள்ளிகள் திறப்பைத் தள்ளிப்போட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது.
இதுகுறித்து கடந்த 25-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்:
"பள்ளி திறப்பை 10 நாட்கள் வரை தள்ளி வைத்தால், பாடத்திட்டங்களை முடிப்பதற்கான கூடுதல் வகுப்புகளை எப்போது நடத்துவது என்ற சிக்கல் உள்ளது. எனினும், தற்போதைய வானிலை அறிக்கை குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தல்
வெப்ப அலைகளின் தீவிரம் குறையாததால், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு பள்ளித் திறப்பை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியது.
அதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதே நடைமுறையைத் தற்போதைய அரசும் பின்பற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தல்: ஜூன் 4-ல் பள்ளி திறப்பு
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் வானிலை நிலவரங்களை ஆய்வு செய்த பின், மாணவர்களின் நலனே முக்கியம் என அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, முதலமைச்சர் விஜய் அவர்களின் உரிய அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1-ஆம் தேதிக்கு பதிலாக, ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) திறக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்த முடிவிற்குப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.