பெங்களூரு: கர்நாடக அரசியலில் கடந்த சில மாதங்களாகவே முதல்வர் நாற்காலியைச் சுற்றி நிலவி வந்த பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா இன்று தனது பதவியை அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கும் அவருக்கும் இடையே நீடித்து வந்ததாகக் கூறப்பட்ட அதிகாரப் போட்டி, இந்த ராஜினாமாவின் மூலம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்கு நேரில் சென்ற சித்தராமையா, அங்கு ஆளுநர் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது அதிகாரபூர்வ கடிதத்தை ஆளுநரின் சிறப்புச் செயலாளரிடம் நேரில் ஒப்படைத்தார்.

"அரசியலமைப்பே எனது மதம்" – எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு:

தனது ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் (X) மிகவும் உணர்வுபூர்வமான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

"ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னால், சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்து, இறுதியில் இரண்டு முறை கர்நாடகாவின் முதலமைச்சராகப் பணியாற்ற முடிந்தது. என் வாழ்நாளில் நான் கற்பனை கூட செய்து பார்க்காத இந்த உயரம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்துத் தந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் மட்டுமே சாத்தியமானது.

புத்தர், பசவண்ணா, மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் நற்சிந்தனைகளே என் வாழ்வின் வழிகாட்டிகள். கடந்த 48 ஆண்டுகால எனது பொதுவாழ்வில் எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரலாகவும், அவர்களின் துணையாகவும் இருந்ததே எனக்குக் கிடைத்த பெரும் திருப்தி."

கட்சித் தலைமைக்கும் மக்களுக்கும் நன்றி:

தனக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை சகாக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியை சித்தராமையா உரித்தாக்கியுள்ளார்.

மேலும், கர்நாடக மக்களே தனது அஸ்திவாரம் எனக் குறிப்பிட்ட அவர், "என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு, தவறுகளைச் சுட்டிக்காட்டி, இக்கட்டான சூழலில் தோள் கொடுத்த கர்நாடக மக்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். நான் இன்று இந்த உயரத்தில் இருப்பதற்கு நீங்களே காரணம்" என்று நெகிழ்ந்துள்ளார்.

இறுதி வரை தொடரும் போராட்டம்:

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், "அரசியலமைப்புச் சட்டமே எனது மதம்; மக்களே எனது கடவுள். இந்த ராஜினாமா என்பது முதலமைச்சர் பதவியிலிருந்து மட்டும்தானே தவிர, பொதுவாழ்விலிருந்தோ அல்லது மக்கள் சேவையிலிருந்தோ அல்ல. எனது இறுதி மூச்சு இருக்கும் வரை சமூக நீதிக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும் நான் தொடர்ந்து சமரசமின்றிப் போராடுவேன்" என்று தனது அறிக்கையில் மிகத் தீர்க்கமாகப் பதிவு செய்துள்ளார்.

சித்தராமையாவின் இந்த திடீர் ராஜினாமா கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட ஆட்சி மாற்றம் மற்றும் புதிய முதலமைச்சர் தேர்வு குறித்த விவாதங்களைச் சூடாக்கியுள்ளது.