சென்னை: "தமிழக அரசியலின் உண்மையான எதிர்காலம் தமிழக வெற்றிக் கழகம்தான். நான் சொல்வதை வேண்டுமானால் இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்; இன்னும் ஒரே மாதத்திற்குள் அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவை நோக்கி வந்துவிடுவார்கள்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக ஆவேசமாகப் பேசியுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அதிர்ஷ்டம் அல்ல... உழைப்பு!
புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "சென்ற மாதம் இதே அரங்கில் தவெக வேட்பாளர்களைச் சந்தித்தபோது, அடுத்த கூட்டத்தை நாம் ஆட்சி அமைத்த பிறகுதான் நடத்துவோம் என்று கூறினோம். இன்று அது நிஜமாகியுள்ளது. எனக்கு அதிர்ஷ்டத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கிடையாது, உழைப்பைத்தான் நம்புவேன். செங்கோட்டையன் இங்கு வந்தபோது பலரும் கேலி பேசினார்கள். ஆனால் இன்று அவரது அரசியல் பயணத்தைப் பாருங்கள்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தற்போது தலைவர் விஜய்யின் அமைச்சரவையிலும் அவர் இடம் பெற்றுள்ளார்" என்றார்.
15 நாள் சாதனையும், எதிர்க்கட்சிகளின் கேள்வியும்:
தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சிப் பொறுப்பேற்று 15 நாட்களிலேயே என்ன சாதித்துவிட்டீர்கள் என்று திமுகவும் அதிமுகவும் கேள்வி எழுப்புகின்றன. மதச்சார்பற்ற ஒரு மிக வலுவான கூட்டணியை உருவாக்கிய பெருமை எங்கள் தலைவர் விஜய்யையே சேரும். நேர்மையான நிர்வாகத்தை வழங்கும் அமைச்சரவையை அவர் அமைத்துள்ளார். நம் முதலமைச்சர் ஊழலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
திமுக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் போன்றவை தனித்தனி கட்சிகள். அப்படியிருக்க, ஒரு கட்சியின் உயர்நிலைக் குழு எடுக்கும் முடிவை கேள்வி கேட்கும் அதிகாரம் ஸ்டாலினுக்கு எப்படி வந்தது? தேர்தலில் அவர்கள் அடைந்த தோல்வியின் ஆதங்கம்தான் இப்படிப் பேச வைக்கிறது" என்று சாடினார்.
ஈபிஎஸ்-க்கு நேரடி கேள்வி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "வெறும் 47 எம்.எல்.ஏக்களை மட்டுமே கையில் வைத்துள்ள உங்களால் எப்படி முதலமைச்சர் ஆக முடியும்? உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் எப்படி அப்படி கையெழுத்து வாங்கினீர்கள்? இதைத்தான் சி.வி.சண்முகமும் அன்று கேள்வி எழுப்பினார்.
மறுபுறம், திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என கம்யூனிஸ்ட் தலைவர் பேபி பேசியுள்ளார். நாங்கள் எந்தவித ஆஃபர்களையும் கொடுத்து யாரையும் எங்கள் கட்சிக்கு அழைக்கவில்லை. தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேர்மையான வழியில் மக்களைச் சந்திக்க தவெகவிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் அன்போடு வரவேற்கிறோம்" என்றார்.
90% அதிமுகவினர் தவெகவிற்கு வருவது உறுதி!
இறுதியாகப் பேசிய அவர், "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காட்டிய மக்கள் நலப்பாதையில் இன்று உண்மையாகத் பயணிப்பது தவெக மட்டும்தான். தவெகவின் தற்போதைய ஆட்சியில் ஊழலும், கமிஷன் கலாச்சாரமும் வேரோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொண்டுதான், திமுகவின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக 90 சதவீத அதிமுகவினர் தவெகவுடன் கைகோர்க்கத் தயாராகிவிட்டனர். தமிழக அரசியலின் உண்மையான எதிர்காலம் தவெகதான். நான் சொல்வதை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ஒரு மாதத்திற்குள் அதிமுகவில் உள்ள 90% பேர் தவெகவில் இணைவது உறுதி" என்று மிகத் தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.