சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரிடம் கடிதம் ஒப்படைப்பு:
தமிழகத்திற்கு வருகை தந்த ஆளுநரை, தனது கட்சியின் 6 முக்கிய எம்.எல்.ஏ-க்களுடன் சென்று விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தவெக சார்பில் வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் பட்டியல் மற்றும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.
எண்களின் கணக்கு:
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், அக்கட்சியின் பலம் 107 ஆகக் கருதப்படுகிறது. இவர்களுடன் 5 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்கியுள்ளது.
விஜய்யின் கோரிக்கை:
தற்போது போதிய பெரும்பான்மை பலம் (Magic Number) கைவசம் இல்லாவிட்டாலும், தமிழக சட்டசபையின் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கில் விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் அவர் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.