தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், துப்பாஸ்பட்டியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 46 பேரைக் காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர்.

அய்யனார்புரம், வெள்ளப்பட்டி, துப்பாஸ்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடைக்கு எதிராக அக்டோபர் 27ஆம் தேதி காலை முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் திரளாகப் பங்கேற்ற இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.

இரண்டாவது நாளாக இன்று போராட்டம் தொடர்ந்த நிலையில், நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அசோக், செல்வம், கட்டபொம்மன், மஞ்சு கணேஷ் மற்றும் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் அடங்குவர். அவர்கள் தற்போது தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.