சென்னை: அதிமுகவில் சட்டமன்றக் குழுத் தலைமை மற்றும் கொறடா பதவிகள் தொடர்பான குளறுபடிகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் அங்கீகரிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது.
"இது தமிழக அரசின் தலைமைச் செயலகமா அல்லது தவெகவின் தலைமைப் பொது அலுவலகமா?" என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "சட்டமன்ற உறுப்பினர்களின் இத்தகைய ராஜினாமா நடவடிக்கைகளுக்குச் சபாநாயகர் பச்சைக்கொடி காட்டினால், தமிழகத்தில் குதிரை பேரம் மிக அதிவேகமாக அரங்கேறும்" என்று எச்சரித்துள்ளார்.
பின்னணி என்ன?
சமீபத்தில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் (நம்பிக்கை தீர்மானம்) போது, அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தங்களது கட்சியின் கொறடா உத்தரவை மீறி, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த இபிஎஸ் தரப்பு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் புகார் அளித்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு நடுவே, அந்த அதிருப்தி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகிய மூவர் தங்களது பதவிகளைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சபாநாயகருடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் பதவி விலகலைச் சபாநாயகர் எக்காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தி, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகரைச் சந்தித்து மனு அளித்தனர்.
சட்டம் என்ன சொல்கிறது? – அக்ரி கிருஷ்ணமூர்த்தி விளக்கம்
சபாநாயகருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆளும் தவெக அரசு மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதற்கு எதிராக வாக்களிக்குமாறு எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ-க்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த 25 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்திருந்தோம். அது தற்போது பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது."
"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின் கீழ், மக்கள் பிரதிநிதிகள் மீது தகுதி நீக்க விவகாரம் நிலுவையில் இருக்கும் போது, அவர்கள் அளிக்கும் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்பது சட்டவிரோதமானது. எனவே, அவர்களின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட முடிவை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்."
மேலும், எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த அடுத்த 5 நிமிடங்களிலேயே அவர்களுக்குத் தவெகவின் உறுப்பினர் அட்டை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினர்களின் சுயநலப் போக்கிற்கு அரசு துணை போகக் கூடாது என்றும், இது ஜனநாயகப் படுகொலைக்கு வழிவகுக்கும் என்றும் குற்றம் சாட்டினார்.