சென்னை: பக்ரீத் பண்டிகை, அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி தொடர் விடுமுறை ஆகியவற்றை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மொத்தம் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பயணிகள் கூட்டம்

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறைகள் ஒன்றாக வருவதால், தமிழகம் முழுவதும் நடப்பு வாரத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதனால் பேருந்து நிலையங்களில் வழக்கத்தை விட தற்போதே மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பொதுவாக இது போன்ற பண்டிகை காலங்களில் அரசுப் பேருந்துகளில் நிலவும் கடும் நெரிசல், நீண்ட நேரக் காத்திருப்பு மற்றும் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிதக் கட்டணம் போன்ற புகார்கள் எழுவது வழக்கம். ஆனால், இந்த முறை பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வண்ணம் விரிவான சிறப்பு ஏற்பாடுகளைப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களின் வழித்தட விவரங்கள்:

பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, சென்னையின் முக்கியப் பேருந்து முனையங்களில் இருந்து பின்வருமாறு சிறப்புப் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட உள்ளன:

  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் (KCBT): இங்கிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இன்று 475 பேருந்துகளும், நாளை 845 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் 455 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கோயம்பேடு பேருந்து நிலையம் (CMBT): இங்கிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
  • மாதவரம் பேருந்து நிலையம்: இங்கிருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப தினசரி சிறப்புப் பேருந்து சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற நகரங்களுக்கான சிறப்புப் பேருந்துகள்:

சென்னை தவிர்த்து பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 300 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மறுமார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள்:

தொடர் விடுமுறை முடிந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குத் திரும்புவதற்காக மட்டும் தனியாக 1,085 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

முக்கிய அறிவிப்பு: பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு வழிகாட்டவும் அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் சிறப்புத் துணைக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.